Mar 15, 2011
கடந்த சனி ஞாயிறு எங்கள் சங்கத்தின் 19வது மாநாடு நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக, மாநாடு குறித்த ஏற்பாடுகள், சிந்தனைகள், கூட்டங்கள் என நாட்கள் சென்றிருந்தன. சங்கம் ஆரம்பித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. முதன் முறையாக இந்த தடவைதான் பெண்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தோம். சனிக்கிழமை வங்கி அலுவல்கள் இருந்ததாலும், கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாய் லீவு கிடைக்காததாலும் முப்பது பெண் தோழர்களே கலந்துகொள்ள முடிந்தது. துவக்கிவைத்துப் பேசும்போது, “ஆண்களாகிய எங்களுக்குள் ஆதிக்கத்தின் வேர்கள் நாடி நரம்புகளுக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் பிரச்சினைகள் எங்கள் கண்களுக்குப் படுவதுமில்லை, பட்டாலும் புரிவதில்லை, புரிந்தாலும் முக்கியமில்லை என்பதாகவே இருக்கிறோம். உங்களைப் பற்றி நீங்கள்தாம் பேச வேண்டும். அதற்குத்தான் இந்த மாநாடு!” என்ற அர்த்தத்தில் பேசினேன். முதலில் தயங்கியவர்கள். பிறகு கொஞ்சம் பேசத் தலைப்பட்டர்கள். கழிப்பிடங்களிலிருந்து கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துவது வரை ஒரு அலுவலகத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை மெல்லிய குரலில்தான் பேசினார்கள். இவை எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் நம் பெண்கள் நம்மோடு பணிபுரிகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்தது. முணுமுணுப்புகளே சுடுவதாய் இருந்தன. வெடிப்புறப் பேசினால்...? இந்த நோக்கத்தில், மாநாட்டின் இறுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு உபகுழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பொது மாநாட்டில் எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். “ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. மெனக்கெடும் முன் தயாரிப்பு இல்லாமலும், இயல்பாகவும் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையும், சுயவிமர்சனங்களும் தன்போக்கில் கலந்திருக்கும். “நாம் எல்லோரும் குரங்கிலிருந்துதான் வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உலகத்தின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் நான் ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து culture செய்வதை நாம் அனுமதிப்போமா? வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா?” என்பது போல பல கேள்விகளை விதைத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார். மாநாட்டின் நிகழ்வுகள் தொடர்ந்து இருந்ததால், சில சம்பிரதாயமான வார்த்தைகளைத் தவிர அவரோடு பேசிக்கொள்ள முடியாமல் போனது. மீண்டும் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். இது தமிழ்ச்செல்வனுக்கு நிச்சயம் பிடிக்காது. “எழுத வாருமய்யா” என எப்போதும் அவரது குரல் இழுத்துக்கொண்டே இருக்கும். பார்ப்போம்.
1989க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனங்களே இல்லை. அதற்குப்பிறகு 2009ல் தான் புதிதாக நூற்றுச் சொச்சம் பேர் பணிக்கு வந்தார்கள். இந்த வருடம் இருநூற்றுச் சொச்சம் பேர் வர இருக்கிறார்கள். இந்த இருபது வருட இடைவெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பல ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இறந்து போயிருக்கிறார்கள். இவைகளோடு கணக்கிட்டால் இப்போது வரும் பணி நியமனங்கள் மிக மிகக் குறைவே. இன்னும் ஐந்தாறு வருடங்களில் பழையவர்களில் 90 சதவீதம் பேர் ஓய்வு பெற்றிருப்பார்கள். புதியவர்களே எங்கும் நிறைந்திருப்பார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கம் குறித்த பார்வையும், சிந்தனைகளும் வேறாக இருக்கின்றன. தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் மட்டுமே வேகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரும் இடைவெளியோடு உருவாகி இருக்கும் புதிய தலைமுறையினை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது எங்கள் வங்கியில் மட்டுமில்லை, இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டு வருகிற முக்கியமான பிரச்சினை . பழைய முறைகளும், வழக்கமான நடவடிக்கைகளும் இனி கதைக்கு ஆகாது. புதிய திசைகளையும், வழிமுறைகளையும் ஆராய்ந்து தொழிறசங்கங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. பார்ப்போம்.
source:www.mathavaraj.com