நெருக்கடிகளூடே பீடுநடைபோடும் உழைக்கும் வர்க்க ‘தீக்கதிர்’

                     தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக திகழ்ந்து வரும் தீக்கதிர் 48 ஆண்டுகால வரலாற்றினை கொண்டுள் ளது. மதுரை பதிப்பாகவும், பின்னர் 30 ஆண்டு கள் கழித்து சென்னையில் ஒரு பதிப்பும், அதன் பின்னர் கோவை, திருச்சி என நான்கு பதிப்புகள் வெளிவருவது பெருமிதம் தரக் கூடிய விஷயமாகும்.

                     ஒரு தொழிலாளி வர்க்க கட்சி தினசரி பத்திரிகை நடத்துவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இன்று தமிழ்நாட்டில் முதலா ளித்துவ கட்சிகள் கூட தினசரி பத்திரிகை நடத்துவதில் எத்தகைய சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. தீக்கதிரும் அத்தகைய சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித் துக் கொண்டே முன்னேறி வருகிறது.

                சோவியத் ரஷ்யாவில் புரட்சி கண்டு ஆட்சி அமைத்த லெனின் நாடு விட்டு நாடு கடத்தப்பட்ட போதிலும் அங்கெல்லாம் தலை மறைவாக இருந்து கொண்டே பத்திரிகை நடத்தி வந்ததை வரலாற்றில் விரிவாக படித்து அறிந்துள்ளோம்.

               ஒரு புரட்சிகர கட்சிக்கு முக்கியத் தேவை புரட்சிகர கட்சி அமைப்பு மட்டுமல்ல, அந்த அமைப்பை தொடர்ச்சியாக வழிநடத்துவதற் கும், அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக ஆயுத பாணியாக்குவதற்கும் பத்திரிகை மிக மிக அவசியம் என்பதை உணர்ந்தே லெனின், பத்திரிகை நடத்துவதில் தனது முழு கவனத் தையும் செலுத்தினார் என்பதை வரலாறு உணர்த்துகிறது.

                   பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூ னிஸ்ட் கட்சிகள் பத்திரிகை மற்றும் பிரசுரங் கள் அச்சடித்து விநியோகிப்பதில் இன்றும் தங்கள் பிரதான அரசியல் பணியாக செய்து வருகின்றன.

                  ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளே டான அஹஹாதா தற்போது 30 லட்சம் பிரதி கள் அச்சிட்டு விநியோகித்து வருகிறது என் பது பிரம்மிப்பூட்டும் செய்தியல்லவா?

ஏகாதிபத்திய உலகமும், பெருமுதலாளித் துவ நாடுகளும் கம்யூனிஸத்திற்கு எதிரான திட்டமிட்ட விஷமத்தன தாக்குதலை நடத்தி அதில் சில தற்காலிக வெற்றிகளை பெற் றுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் - ஏகாதிபத்திய சதிகளையும் அம்பலப்படுத்தவும், உள்நாட்டு ஆதிக்கத் சக்திகளையும், முதலாளித்துவ அரசுகளின் மக்கள் விரோத கொள்கை களையும் தோலுரித்துக் காட்டவும், தொழி லாளி வர்க்க நலனை பாதுகாத்து அந்நாட் டில் ஒரு புரட்சிகர மாறுதலை கொண்டு வர வும் பத்திரிகைகளின் முக்கிய பாத்திரத்தை உணர்ந்தே அவற்றை நடத்தி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தினசரி இதழ் களும், வார இதழ்களுமாக மொழி வாரியாக பல இதழ்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக மாநில அரசினை தலைமை தாங்கி நடத்தி வருகிறது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த அரசுக்கு எதிராக மாநிலத்தில் உள்ள அனைத்து முத லாளித்துவ பத்திரிகைகளும், ஏனைய ஊட கங்களும் பொய்யையும், புனை சுருட்டையும் வாரி இறைக்கின்றன. கட்சி அணிகளையும் மக்களையும் குழப்புகின்றன. ஆனால் கட்சி யின் நாளேடான ஜனசக்தி நாளிதழ் மட்டுமே கட்சி அணிகளுக்கும், மக்களுக்கும் உண் மையை எடுத்துரைக்கின்றன. முதலாளித் துவ பத்திரிகைகளின் அவதூறு சரியான பதிலடி தந்து வருகிறது. மாநில அரசின் கேடயமாக திகழ்ந்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஆயுதங்களை கடத் திக் கொண்டு வந்து வீசிய செயல் இந்திய மக்களிடம் பல்வேறு சந்தேகங்களையும் அன்று எழுப்பியது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி, மாநில அரசை கவிழ்த்திட நமது நாட்டிற்கு எதிரான சீர்குலைவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை அடிமையாக்க மத்திய அரசாங்கமே இந்த காரியத்தை செய்தது என்ற உண்மை வெளிவந்துள்ளது. இப்படியும் நடக்குமா என்று விவரம் அறிந்த அனை வரும் வேதனையோடு கேள்வி எழுப்புகின் றனர். ஆனால், மத்திய அரசோ வாய் மூடி மவுனம் காக்கிறது. ஒரு சில பத்திரிகைகள் தவிர வேறு எவையும் இதுபற்றி கண்டு கொள்ளவே இல்லை. இத்தகைய தேச விரோத மோசடி கும்பல்களின் போலி வேஷத்தை கலைத்திட நாம் ‘ஜன சக்தி’ யைத்தான் பயன்படுத்த முடியும்.

அதேபோல் கேரளாவிலும், திரிபுராவி லும் நமது கட்சி மற்றும் அரசுகளை பாது காப்பதால் நமது நாளிதழ்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

தமிழகத்தில் கட்சி அணிகளுக்கு அன் றாட அரசியல் குறித்தும் கட்சியின் நடை முறை கோட்பாடுகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறும் பணியில் தீக்கதிர் தனது கடமையினை நிறைவேற்றி வருகிறது.

கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்பு களின் கிளர்ச்சி, பிரச்சாரத்திற்கு உறுதுணை யாக இருந்து வருகிறது. கட்சி மற்றும் வெகு ஜன அமைப்புகளின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் பல்வேறு மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் கேளாக் காதினராக உள்ள ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரத்து கூறி வருகிறது.

கட்சி ஸ்தாபக பணியிலும் தனது பங் களிப்பை செலுத்துகிறது. ஆனால், தீக்கதிர் தான் செய்து வரும் பணியில் முழுமையாக வெற்றியடைந்துவிட்டதாக கூறவில்லை. இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்ற ஆதங்கம் பல்வேறு மட்டத்திலும் உள்ள கட்சி தோழர்களிடம், அணிகளிடம், வாசகர்களி டம் உள்ளது. இந்த எதிர்பார்ப்பு சரியானதே. ஆனால், தீக்கதிர் பதிப்புகளில் இன்றுள்ள குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிகளுக்கு மத்தியில், மிகக்குறைந்த மனித ஆற்றலுடன் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மார்தட்டி கூறமுடியும்.

தீக்கதிர் வரலாற்றில் அதன் விற்ப னையை உயர்த்துவது என்பது பெரும் சவா லாகவே உள்ளது. 1993ல் சென்னை பதிப்பு துவங்கிய பின் விற்பனையில் ஒரு விரிவாக் கம் ஏற்பட்டது. அடுத்து கோவை, திருச்சி பதிப்புகளுக்கு பின்னர் விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம் காண முடிந்தது. இருப்பினும் போதுமானதல்ல.

2005ல் நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், தமிழ் நாட்டில் உள்ள கட்சி உறுப்பினர் எண்ணிக் கைக்கும் தீக்கதிரின் விற்பனைக்கும் உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டி தீக்கதிரின் விற்பனையை உயர்த்த வேண்டியதன் அவசி யத்தை பளிச்சென்று விளக்கிக் கூறினார். கட்சித் தலைமையும், அமைப்புகளும் விற் பனையில் உள்ள இந்த குறைபாட்டினை போக்கிட உறுதி மொழி ஏற்றன.

இதன் விளைவாகவே அடுத்தடுத்து இதுகுறித்து திட்டமிட்டு தீக்கதிர் விற் பனையில் ஒரு தொடர்ச்சியான முன்னேற் றத்தைக் காண முயற்சித்தோம். இதில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நமது பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டிய இலக் கினை எய்திட மேலும் தீவிரமாக முயற்சித் திட வேண்டும். வரும் காலங்களில் விற் பனையில் உள்ள சவால்களை சந்தித்து மேலும் மேலும் முன்னேற்றம் காண்போம்.

தமிழகத்தை பொறுத்தவரை மாறி, மாறி ஆட்சிக்கு வரும் ஆளுங்கட்சிகள் அரசியல் உறவுக்கு ஏற்பவே தீக்கதிருக்கு விளம்பரம் தருகின்றன. உறவு என்றால் விளம்பரம், அர சுக்கு எதிரான நிலைப்பாடு என்றால் விளம் பரம் இல்லை என்று பாரபட்சமான போக் கினை கடைப்பிடிக்கின்றன.

ஆனால், வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய பாரபட்சமான போக்கு இல்லை. மேற்குவங்கத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக புழுதி வாரி இறைக்கும் பத்திரிகை களுக்கும் தவறாமல் விளம்பரம் தரப்படுகிறது. அதே போல் கேரளத்திலும் இடதுசாரி அரசு ஆளும் போது அதற்கு எதிராக விஷமத்தன மாக எழுதும் பத்திரிகைகளுக்கும் விளம்பரம் நிறுத்தப்படுவதில்லை. ஆந்திரா போன்ற பல மாநிலங்களிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவ தில் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டுமே அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் விளம்பரம் தரமறுப்பது என்ற நிலை உள்ளது.

தீக்கதிரை பொறுத்தவரை எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், சோதனைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்து முன்னே றும், இந்த வகையில் பல நெருக்கடிக்கு மத் தியிலும் சென்னை பதிப்பில் புதிய வண்ண அச்சு எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல வளர்ச்சிகளை கண்டிட திட்டமிடப் பட்டுள்ளது.

                       கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்களை முறியடித்து எவ்வாறு முன்னேறியதோ அதே போல் எதிர்வரும் காலங்களிலும் நெருப்பாற் றில் நீந்தி தொடர்ந்து பீடுநடை போடும் என்பதை உறுதிபடக் கூறுகிறோம்.