சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது


பல்பொருள் சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு நாடு முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான சிறுகடை வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை, அரசின் இந்த முடிவு அழித்து நிர்மூலமாக்கும்; சில்லரை விற்பனைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். மிகக்கடுமையான அளவில் நீடிக்கும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவசாய நெருக்கடியின் துயரம் ஆகியவற்றின் பின்னணியில், இந்த முடிவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத மனப்பான்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து செயலாற்ற மத்திய அரசு ஆவலோடு இருக்கிறது என்பதும், தனது சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பதைவிட வால் மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ஃ போர் போன்ற பன்னாட்டு அனகோண்டாக்களுக்கு சேவை செய்யவே ஆவலோடு இருக்கிறது என்பதும் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு நிபந்தனைகள் என்ற பெயரில் அரசு அறிவித்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவையாகவும், எந்த தரப்பு மக்களையும் பாதுகாக்க உகந்தவையாகவும் இல்லை. ரூ.520 கோடி முதலீட்டுத்தகுதி என்பது வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃ போர் போன்ற பகாசுர சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இந்த கம்பெனி கள் பல்லாயிரம் கோடி டாலர் முதலீட்டு சக்தி கொண்டவை. அந்நிய சில்லரை விற்பனை மையங்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசின் கட்டுப்பாடு, எந்தவிதத்திலும் அர்த்தமற்றது. ஏனென்றால், மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் கூடுதல் வருமானம் கொண்ட பிரிவினரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு இது போன்ற மாநகரங்களில் முதலில் கடைவிரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். இத்தகைய பெரும் நகரங்களில்தான் மிக அதிக அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் குவிந்திருக்கிறார்கள்.

உலகிலேயே சில்லரை வியாபாரம் மிக அதிக அளவிலும், மிக விரிவான அளவிலும் நடக்கும் நாடு இந்தியாதான். இங்கு ஆயிரம் நபர்களுக்கு 11 சிறு கடைகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 1.2 கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடைகளில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். இவற்றில் 95 சதவீத கடைகள் தங்களுக்கு தாங்களே சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொண்ட நபர்களால் 500 சதுர அடி பரப்பிற்கும் குறைவான இடத்தில் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் சில்லரை விற்பனை கடைகள் நுழைந்தால், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மிக மிகக்கடுமையான முறையில் தாக்கப்படுவார்கள். எங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தனவோ, அங்கெல்லாம் சிறுகடை வியாபாரிகள் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறு அளவிலான சில்லரை விற்பனைக்கடைகள் என்பவை முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டனர்; இப்போது வரைமுறையின்றி வளர்ந்து நிற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கடுமையான உரிம விதிமுறைகளை இந்நாடுகள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சில்லரை வர்த்தகத்துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவிற்கு, சில்லரை விற்பனை நடவடிக்கைகளுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறி அரசு நியாயப்படுத்துகிறது. (இந்த முதலீடு உணவு மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தல், தயாரிப்புப்பணி, விநியோகம், வடிவமைப்பு மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சேமிப்புக்கிடங்குகள், குளிர்பதன வசதி கொண்ட கட்டமைப்புகள் மற்றும் பேக்கிங் போன்ற துறைகளில் செய்யப்படவேண்டும் என்று அரசு கூறுகிறது.) இந்த நிபந்தனை, நாட்டில் சரக்குகளைக் கையாள இன்னும் கூடுதல் வாய்ப்பு வசதிகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவற்றை உருவாக்க உதவும் என்றும், இது விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் சில்லரை விற்பனை மையங்களால் நடத்தப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், சிறு விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். மாறாக, விவசாயிகளுக்கு மிக மிகக் குறைவான விலையே கிடைக்கப் பெற்றுள்ளது. விளைபொருட்களுக்கு தன்னிச்சையாக தர நிர்ணயம் செய்துகொண்டு, விவசாயிகளின் பொருட்கள் அந்தத் தரத்தை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி விலையை அப்பட்டமாகக் குறைப்பதே அனுபவமாக இருந்திருக்கிறது. பன்னாட்டு பெரும் நிறுவனங்களை விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்பை  கைவிடுவதேயாகும்.  இது நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிகக்கடுமையான பாதகத்தை ஏற்படுத்தும்.

சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள், பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட்டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான நுகர்பொருட்களின் ஒட்டுமொத்த சப்ளை மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டை கொண்டுவரும். உள்நாட்டுச் சந்தைக்குள் அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இப்படி பொருட்கள் வந்து குவிவது, சில்லரை விற்பனையில் பொருட்களின் விலை குறையவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கவும் உதவும் என்று கூறப்படுவது முற்றிலும் மோசடித்தனமானது. ஏகபோக சந்தை அதிகாரமும், பெருமளவிலான பொருட்களை இருப்பு வைக்கும் திறனும் கொண்ட இந்த மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விலைக்குறைப்பில் ஈடுபடாது; மாறாக பொருட்களை பதுக்கி வைத்து, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே முனையும்.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பணத்தைக் கொடுத்து பொருளை பெற்றுச்செல்லும் வர்த்தகத்தில் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன; இதற்காக அரசு அனுமதியும் அளித்துள்ளது. இந்த அனுமதியை பெற்ற நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தொடர்ந்து மீறியே வந்திருக்கின்றன; ஆனால் இதை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல சுயகட்டுப்பாடு என்ற முறையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்த நிபந்தனைகளை அமல்படுத்துவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையை தாராளமாக திறந்துவிட வேண்டுமென்று நீண்ட காலமாகவே மத்திய அரசை பன்னாட்டு பெரும் நிறுவனங்களும் அந்நிய அரசாங்கங்களும் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் இந்த முடிவை மேற்கொள்ளவிடா மல் இடதுசாரி கட்சிகளே தடுத்து நிறுத்தின. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், எந்தவித தடையுமின்றி அந்நிய நிர்ப்பந்தங்களுக்கு அரசு முழுமையாக பணிந்து கொண்டிருக்கிறது.

அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பு மக்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்த்து நிற்கவேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. நம் தேசத்தை, நமது எதிர்காலத்தை காக்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு நிற்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இந்தியா விற்பனக்கல்ல என்று ஆவேசத்தோடு போராடும் தருணம் இது!

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் -எம்.கண்ணன்

  
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப் போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந் திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசுஎப் படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப் படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங் கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை - ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படு கின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடா ளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட் களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத் தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயி ரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசு களுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானி யமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த் தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவா லியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்

(கோடியில்) (கோடியில்) (கோடியில்)

ஐஒசி 5294 .00 832.27 6126.27 எச்பிசிஎல் 2142.22 90.90 2233.12

பிபிசிஎல் 2142.22 198.00 2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமை யிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறு வனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடு களுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறு வனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட் களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் கார ணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்று மதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட் ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக் கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வரு மானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடை யும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழை கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத் திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானி யத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக் கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ்- திமுக அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முத லாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடி யை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரி களில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகை கள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழை களை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர் களை மேலும் பணக்காரர் களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்
நன்றி : தீக்கதிர்   நாளிதழ்

மறைக்கப்படும் உண்மைகள்

                சர்வதேச சந்தையி லிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல்    இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட் ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

                நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கை கள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக் கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறு தலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோ லியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊட கங்களும் தூக்கிப் பிடிக்கின்றன.

                        எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறு வனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிட வில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி ( இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை யாக 49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் - டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலா பம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டி விடாதீர்கள், பிரதமர் அவர்களே.

                      பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம், நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப் பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கை யாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறை யில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங் களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

                      இப்போது மற்றொரு எதார்த்த நிலையை யும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறை யில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலு கைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட் டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட் சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபா யாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத் தால் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அர சாங்கம் ரத்து செய்திருக்கிறது.

             நிதிப் பற்றாக்குறை     என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர் அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டி ருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளா தாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவை யான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக் காது. மாறாக, வேலைவாய்ப்புகளும், அத னைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

                       கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக் கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித் திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம் என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக் குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற் றையும்விட மோசமான அம்சம், விவசாயத் தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச் சியடைந்திருப்பதாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தை குஷிப்படுத் திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள் கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற் காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கை களைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளி லிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி  வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

                           நாட்டு மக்களின் நலன்களைக் காப் பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச் சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங் களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.
நன்றி : தீக்கதிர் நாளிதழ்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

                                       1934  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த  நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று,  பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப்  பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில்,  புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம்  உணரப்பட்டிருக்கிறது.
மாவோ  குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை  தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக்  கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப்  போகிறீர்கள்.


சீனப்  புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி  ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ.  அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா  சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம்  வெளியிட்டுள்ளது.


லீயின்  கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம்.  மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே  விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன்  பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம்  செய்துகொள்கிறார்கள்.
மெய்க்காப்பாளர்  எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள்  குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த  மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது  பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான்  மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட
குதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.
அத்தகைய  எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை  விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட  பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த  அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.


இப்புத்தகத்தை  வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக்  கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை  வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக  அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல்  தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத்  துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில்  ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது;  அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக  ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை.  இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும்  ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம்  புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட  வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில்  அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று  எதிர்த்தார்.


அதற்கு  காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப்  பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ  நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே  நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும்  கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே  அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின்  குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும்.  மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு  அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத்  தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.


அதே  நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம்  நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால்  முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல்  செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட  உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட  முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று  அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம்,  குழுங்கியது, கண்கள் கசிந்தன.


“மாவோ  அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த  இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார்  மெய்க்காப்பாளர்.


ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.
“நாம்  கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.  மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு  நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும்  மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.



எல்லா  சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர்,  தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை  மேற்கொண்டார்.


அதைப்போல,  நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம்  இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்  மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள்  சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய  சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.


-இரா.சிந்தன்


மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம் 

ருஷ்ய புரட்சி

ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்


lenin

வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயமாதல் என்ற பெயரில் உருவான அக-புற நெருக்கடிகள் எளியமனிதர்களை மூச்சுத்திணறச் செய்து ஒடுக்கிவருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தெருவில் இறங்கிப் போராடி வெற்றி பெற்று வருகிறார்கள்.
துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்து எதேச்சதிகார ஆட்சி நடத்திய அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அரசு அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன் றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அடக்கு முறைகளைப் பற்றிய பயமின்றி  கடல் போன்று மக்கள் திரண்டு ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்து புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள்.
எண்ணெய் வளத்திற்காக பல ஆண்டுகாலமாக அமெரிக்கா தன் பிடியில் வைத்திருந்த வெனிசுலாவிலும் இது போன்ற மக்கள் எழுச்சியே அதிபர் சாவேஸ் அரசை உருவாக்கியது. இந்த எல்லா மக்கள் எழுச்சிகளுக்கும் ஒரே அடித்தளம்தான் உள்ளது. அது தான் ருஷ்யப் புரட்சி என்று அழைக்கப்படும் நவம்பர் புரட்சி.
மனிதகுல வரலாற்றில் பெரும் பான்மை நாடுகள் போரின் வழியாக கைப்பற்றப்பட்டு அடிமையாக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான மனிதர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நாட்டின்  பூர்வீக குடிமக்கள் இரண்டாம் பட்ச பிரஜைகளாக நடத்தப்படுவார்கள். அந்த நிலையை மாற்றி ஒரு தேசத்தின் அரசியல் மாற்றத்தை மக்களே முன்நின்று நடத்தியது ருஷ்ய புரட்சியில் தான் நடந்தேறியது.
ஜாரின் அதிகார ஒடுக்குமுறைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் ஒன்று திரண்டு நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பொதுவுடைமை ஆட்சியை உருவாக்கிக் காட்டியதே ருஷ்யபுரட்சியின் அளப்பரிய சாதனை.
அது தற்செயலாக உருவான ஒன் றில்லை, உருவாக்கப்பட்டது. அதன் பின்னே மார்க்ஸின் சிந்தனைகளும் லெனினின் வழிகாட்டுதலும் களப்பணியாளர்களின் ஒன்று திரண்ட போராட்டமும் கலைஇலக்கியவாதிகளின் இடைவிடாத ஆதரவும் ஒன்று சேர்ந்திருக்கிறது.
ருஷ்யப் புரட்சி குறித்து நிறைய வரலாற்று ஆவணங்கள், வீரமிக்க சம்பவங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஷோலகோவின் "டான் நதி அமைதி யாக ஓடிக் கொண்டிருக்கிறது" என்ற நாவல் புரட்சி காலகட்ட ரஷ்யாவை மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கிறது. நவம்பர் புரட்சியைப் பற்றிய ஐசன் ஸ்டீனின் அக்டோபர் அல்லது உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப் படம் ஒரு அரிய ஆவணக்களஞ்சியம். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்துப் போய்விடுகிறது.
ருஷ்யப் புரட்சியை நினைவு கொள்ளும்போது  அதை ஒரு மகத்தான வரலாற்றுச் சம்பவம் என்று மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம், வரலாறு நமக்கு எதை நினைவு படுத்துகிறது, எதை நாம் முன்னிறுத்திப் போராடவும் முன்செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.
கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, இனி பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் அரசு ஒருபோதும் உருவாகாது என்ற பொய்ப்பிரச்சாரத்தை உலகின் முக்கிய ஊடகங்கள் அத்தனையும் கடந்த பல வருசங்களாகத் தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது நிஜமில்லை என்பதையே கிரீஸ், பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து என்று ஐரோப்பாக் கண்டத் தின் சகல போராட்டங்களும் நிரூபணம் செய்தபடியே இருக்கின்றன.
ஊடகச் செய்திகளால் அவற்றை மறைக்க முடியவில்லை. ஐரோப்பாவில், அரபு நாடுகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மக்கள் எழுச்சி எதை அடையாளம் காட்டுகிறது. புரட்சி ஒரு போதும் தோற்றுப்போவதில்லை என்பதைத்தானே காட்டிக் கொண்டிருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடும் மக்கள், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதற்குச் சான்றாக ருஷ்ய புரட்சியையே நினைவு கொள்கிறார்கள். அதுதான் நவம்பர் புரட்சியின் உண்மையான வெற்றி.
ருஷ்யப் புரட்சி வரலாற்றில்  பல முன்மாதிரிகளை உருவாக்கியது. அந்த மாற்றம் மானுடவிடுதலையின் ஆதார அம்சங்கள் தொடர்பானது. நாகரீகம் அடையத் துவங்கிய நாளில் இருந்தே மனிதர்கள் சம உரிமையுடன் வாழும் கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண் டிருந்தார்கள். ஆனால் அதை எந்தச் சமூக அமைப்பும் அவர்களுக்குத் தர முன்வரவில்லை. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த பிரபுக்களின் ஆட்சியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்கே முதல் உரிமை தந்தது.
வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மதவாத இனவாத ஒடுக்குமுறைகளும் எளிய மனிதர்களை வாட்டி வதைத்தன. அந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, மக்களுக்கான அரசை உருவாக்கியதோடு பொதுவுடைமை என்ற சித்தாந் தத்தை வாழ்வியல் நெறியாக உருமாற்றியது. ரஷ்ய புரட்சியின் காரணமாக ருஷ்யாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட் டன. தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. ஜாரின் பிடியில் இருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷ்யா சுதந்திர நாடாக, முழுமையான சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த முன்முயற்சிகள் உலகின் பலதேசங்களுக்கும் வழிகாட்டுவதாக இருந்தன. நவம்பர் புரட்சியைப் போல ஒன்று தங்களது நாட்டிலும் உருவாகி விடாதா என்ற ஏக்கம் உலகெங்கும் தோன்றவே செய்தது. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானமேதைகள் இதை வெளிப்படையாகவே ஆதரித்து, அறிவியல் பூர்வமான சமூகமாற்றம்  என்று கொண்டாடினார்கள்.
நவம்பர் புரட்சியால் உருவான முக்கிய பாடம் உலகின் சகல அதிகார அடக்குமுறைகளையும் மக்கள் நினைத்தால் தூக்கி எறிந்து மாற்றிவிட முடியும் என்பதே. அதனால்தான் ருஷ் யப்புரட்சி மகாகவி பாரதிக்கு உத்வேகமான யுகப்புரட்சியாகியிருக்கிறது. மாய கோவ்ஸ்கியை நம் காலத்தின் மகத்தான கனவு நிறைவேற்றப்பட்டது என்று கொண்டாடச் செய்திருக்கிறது.
மனித சமூகத்தின் சகல கேடுகளுக்கும் உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அராஜகமே. அது வளர்ந்து வரும் நாடு களைப் பரிசோதனை எலிகளைப் போலாக்கி, தனது சொந்த லாபங்களுக்குப் பலிகொடுத்து வருகிறது. அன்றாட வீட்டு உபயோகப்பொருளில் துவங்கி ஆயுதவிற்பனை வரை சகலமும் பொருளாதார அராஜகத்தின் கைகளில் தானிருக்கிறது. ஆனால், பொது வுடைமை சித்தாந்தத்தைத் தனது வழி காட்டுதலாக எடுத்துக் கொண்ட நாடுகள் இதிலிருந்து மாறுபட்டு, மக்களின் உண்மையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளையே மேற்கொள்கின்றன.
உதாரணத்திற்கு, வெனிசுலா, லத் தீன் அமெரிக்க நாடுகளின் தலைவாசல் போலுள்ள சிறிய நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கிறது. அதாவது, இங்கிருந்து நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அதை நேரடியாகக் கொண்டு செல்ல மிகநீண்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. அவற்றின் வழியே ஆதாயம் அடைபவை அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். நாட்டின் அறுபது சதவீத மக்கள் வறுமையாலும் நெருக்கடியா லும் வாடினார்கள்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மய மாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடினர். தேர்தல் வந்தது, உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவேஸை வெற்றி பெறச் செய்தனர்.
சாவேஸ், அதிபர் பதவிக்கு வந்ததும். எண்ணெய் வருவாயை விழுங்கிக் கொழுத்து வந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். உடனே அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சாவேஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. இது சாவேஸ் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த  வெற்றி மட்டுமல்ல,  பன்னாட்டு வணிக மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
வெனிசுலாவின் புதிய அரசு பல வழிகளில் உலகிற்கு வழிகாட்டுகிறது. அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது.  குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உரிமையிலிருந்த பயிரிடப்படாத நிலங் களை ஏழை விவசாயிகளுக்கு சாவேஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக உள்ளது கம்யூனிச அரசான கியூபாவின் ஆட்சி முறை.
அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கியூபாவில் 155 பேருக்கு ஒரு டாக்டர், அதாவது 50 வீடுகளுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதோடு இறப்பு சதவீதமும் வெகு வாகக் குறைந்திருக்கிறது. அங்கே மருத்துவர்கள் நோயாளிகளின் வீடு தேடிவந்து சிகிச்சை செய்வதோடு மரபு மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒன்றாகவே மேற்கொள்கிறார்கள்.
இன்னும் கூடுதலாகச் சொல்வதாயின், கியூபாவில் மருத்துவக்கல்வி முற்றிலும் இலவசம். அமெரிக்காவில் ஒரு மாணவன் மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பணம் குறைந்த பட்சம் 70 லட்ச ரூபாய். அதே மருத்துவம் கியூபாவில்  இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. நோய்மையுற்ற மனிதனை நலமடையச் செய்யும் உயரிய சேவை. ஆகவே மருத்துவம் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது தான் சோசலிசம் கண்ட கனவு.
உலகமயமாக வேண்டியது ஆயுதங்களும் அணுகுண்டுகளும் வெறுப்பும் வன்முறையுமில்லை, அனைவருக்குமான கல்வி, அடிப்படை சுகாதாரம், சமாதானம், பெண்களுக்கான சம உரிமை இவையே உடனடியாக உலக மயமாக்கப்பட வேண்டியவை என்கிறது கியூபா. இந்த கருத்தாக்கங்கள் யாவுமே ருஷ்யபுரட்சியில் இருந்துதான் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது.
முன்னெப்போதையும் விட இன்று பொதுவுடைமைச் சித்தாந்தம் அதிகம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருவதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.
கியூபா தேசத்தின் நல்லெண்ணத் தூதுவராக பணியாற்றியவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்  அவர் இடதுசாரிகளை நேசிப்பதுடன் மக்கள் அரசிற்கான உறுதுணை செய்பவராக இருக்கிறார். அவரது வட்டசுழல் பாதையில் ஜெனரல் என்ற நாவல் வெளியான இரண்டாம் நாள் தனது அத்தனை அரசுப்பணிகளுக்கும் ஊடாக அதிபர் பிடல் காஸ்ட்ரோ அந்த நாவலைப் படித்து முடித்து உடனே ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதினார். கட்சிப்பணிகள், அரசுப்பணிகள் அத்தனைக்கும் இடையில் கலைஇலக்கிய ஈடுபாட்டினை தக்க வைத்திருப்பதே காஸ்ட்ரோவின் வெற்றிக்கான முக்கிய ரகசியம்.
இது போன்ற விருப்பம் லெனினுக்கும் இருந்தது. அவர் தனது போராட்டக் காலத்திலும் தலைமறைவு நாட்களிலும் உன்னதமான இசையையும் டால்ஸ்டாய், கோகல்,  கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதோடு அந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடவும் செய்தார்.
இலக்கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறியச் செய்திருக்கிறது.  அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிப்பதும் விடாப்பிடியாக கலை இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதுமே சரியான பொதுவுடைமைவாதிக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.
நவீன தமிழ் இலக்கியத்தை உரு வாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஸ்டெப்பி யும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைக் கூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன.
அன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்கள் உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அது துயருற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும். ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார். உண்மை தான் அது. பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.
ருஷ்ய படைப்பிலக்கியங்களை மறு வாசிப்பு செய்தலும், உரிய கவனப் படுத்துதலும், ருஷ்ய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைகளான ஜசன்ஸ்டீன், வெர்தோ,  டவ்சென்கோ, போன் றவர்களின் திரையாக்கங்களை ஊரெங்கும் திரையிட்டு வரலாற்றை நினைவுபடுத்துவதும்  இன்று இடது சாரிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கலைஇலக்கியச் செயல்பாடாகும்.
மார்க்சின் காலத்தில் இருந்த தொழிலாளர்களுக்கும் இன்றுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று பல் வேறு இனம், மதம், சாதி, சார்ந்த வேறுபாடுகளுடன்    சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்டவர்களாக நவீன உழைக்கும் வர்க்கம் உள்ளது. அதிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் காலகட்ட மிது. ஆகவே அவர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் வழியே மக்கள் எழுச்சியை உருவாக்குவது அதிக சவாலும் போராட்டங்களும் நிரம்பியது.
பின்நவீனத்துவ சிந்தனையாளர் பியே போர்த்தியோ (pierre Bourdieu)  இன்றுள்ள உலக அரசியல் நெருக்கடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "நியாயமற்ற விதிகளை உருவாக்கி அதை நாமாக கைக்கொள்ள வைப்பதுடன், அதற்கு மறுப்பேயில்லாமல் ஒத்துப்போகச் செய்வதுமே  உலகமய மாக்கல் செய்யும் தந்திரம்'' என்கிறார்.
எந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும்  உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுவது மேலானது என்ற அடையாள அட்டையை ஏந்திய படியே எகிப்தில் மக்கள் திரள் திரளாக கூடி நின்று முழக்கமிட்டது எகிப்திய அரசை நோக்கி மட்டுமில்லை; உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக் கள் அனைவரையும் நோக்கித்தான். ஆகவே அந்தக் குரலுக்கு செவிசாய்க் கவும் அதன் உத்வேகத்தில் செயல்படவும் தயாராவதே ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாகும்.

-எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்