மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

                                       1934  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த  நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று,  பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப்  பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில்,  புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம்  உணரப்பட்டிருக்கிறது.
மாவோ  குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை  தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக்  கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப்  போகிறீர்கள்.


சீனப்  புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி  ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ.  அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா  சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம்  வெளியிட்டுள்ளது.


லீயின்  கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம்.  மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே  விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன்  பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம்  செய்துகொள்கிறார்கள்.
மெய்க்காப்பாளர்  எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள்  குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த  மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது  பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான்  மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட
குதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.
அத்தகைய  எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை  விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட  பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த  அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.


இப்புத்தகத்தை  வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக்  கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை  வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக  அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல்  தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத்  துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில்  ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது;  அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக  ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை.  இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும்  ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம்  புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட  வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில்  அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று  எதிர்த்தார்.


அதற்கு  காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப்  பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ  நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே  நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும்  கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே  அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின்  குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும்.  மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு  அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத்  தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.


அதே  நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம்  நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால்  முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல்  செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட  உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட  முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று  அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம்,  குழுங்கியது, கண்கள் கசிந்தன.


“மாவோ  அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த  இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார்  மெய்க்காப்பாளர்.


ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.
“நாம்  கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.  மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு  நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும்  மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.



எல்லா  சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர்,  தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை  மேற்கொண்டார்.


அதைப்போல,  நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம்  இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்  மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள்  சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய  சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.


-இரா.சிந்தன்


மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம்