காலிப் பணியிடங்களை நிரப்புக : சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்
கோழிக்கோடு, ஏப். 6 -
மத்திய - மாநில அரசுப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்ளில் வாழும் மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு மிகுந்த கவலையோடு பார்க்கிறது. தற்போதுள்ள கொள்கைகள் தொடர்ந்தால் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மோசமான வருங்காலம் காத்திருக்கிறது என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்று சொல்லப்படுவதெல்லாம் வேலையில்லா மற்றும் வேலையிழப்பு வளர்ச்சியாகவே அந்தப்புள்ளிவிபரம் சித்தரிக்கிறது.2009-10ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வுப் புள்ளிவிபரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. 2000-2005 காலகட்டத்தில் வருடாந்திர வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது 2.7 சதவிகிதமாக இருந்தது. 2005-2010 காலகட்டத்தில் இந்த வளர்ச்சி வெறும் 0.8 ஆக மட்டுமே இருந்தது. விவசாயமல்லாத துறையிலும் 4.65 சதவிகிதம் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்றிருந்த நிலை மாறி, இரண்டாவது காலகட்டத்தில் 2.53 சதவிகிதமாகக் குறைந்தது. இத்தனைக்கும் இரண்டாவது காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது.
100 நாள் வேலைத் திட்டத்தால், ஆண்டுக்கு 40 அல்லது 50 நாட்கள் வேலையைக்கூட குடும்பங்களுக்கு உத்தரவாதப்படுத்த முடியவில்லை.15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில்தான் வேலையின்மை பெரிய அளவில் உள்ளது. கிராமப்புற இளம் ஆண்களில் 10.9 சதவிகிதமும், கிராமப்புற இளம் பெண்களில் 12 சதவிகிதமும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறத்தில் உள்ள நிலைமையும் கவலைக்குரியதாக இருக்கிறது. இளம் ஆண்களில் 10.5 சதவிகிதமும், இளம் பெண்களில் 18.9 சதவிகிதமும் வேலையின்மை நிலவுகிறது. வேலையில்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வதில்லை. இருந்தாலும், நாட்டிலுள்ள 966 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்த நிலவரப்படி 3.81 கோடிப்பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு கவலையான நிலைமை இருக்கையில் மத்திய அரசுத்துறை, பொதுத்துறை களில் பணியிடங்களை நிரப்புவதற்குள்ள தடைக்கு கட்சியின் 20வது மாநாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மாநாடு எதிர்க்கிறது. மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காவல்துறை மற்றும் ராணுவத்தில் நிரப்பப்படாத பணியிடங்களின் எண்ணிக்கை ஏழு லட்சமாகும். ஏப்ரல் 1, 2011 அன்றுள்ள கணக்கின்படி, பிரிவு சி மற்றும் டி பணியிடங்களில் 2.2 லட்சம் இடங்கள் ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ளன. ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார ஆய்வாளர்கள் போன்றவற்றிற்கான பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
இவற்றில் பாதிக்கும் மேல் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாகும்.பெரிய அளவில் வேலைகளை வழங்கிக் கொண்டிருக்கும் அரசுத்துறை, புதிய வாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறது. நாட்டில் மொத்தமுள்ள 46 கோடி உழைப்பாளிகளில் வெறும் 2.87 கோடிப்பேர்தான் அணிதிரட்டப்பட்டவர்கள் என்று 2010 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரம் கூறுகிறது. பெரும் வளர்ச்சி என்று சொல்லப்படுவதன் உண்மையான தன்மையை இது அம்பலப்படுத்துகிறது. சேவைத் துறை மற்றும் தொழிற்துறையால் விவசாயத்துறையில் உள்ள உபரி தொழிலாளர்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இத்தகைய நிலைமை நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்திற்கு இடையில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது. இதுவரை இல்லாத அளவில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. வேலையில்லா மக்கள், குறிப்பாக இளைஞர்களை அணிதிரட்டி கீழ்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுமாறு தனது அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய- மாநில அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியிடங்களை நிரப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல்.
காலியாக இருக்கும் இடங்களை ஒழிப்பதைக் கைவிட்டு, அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும்.- பதிவு செய்துள்ள வேலையில்லாத வருக்கு வேலையின்மை நிவாரணம் தரப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும்.- 100 நாள் வேலைத்திட்டத்தை குடும்பங்களுக்கு என்றில்லாமல் அனைத்துத் தனிநபர்களுக்கும் என்று விரிவடையச் செய்தல்.- குறைந்தபட்சக்கூலியுடனான நகர்ப்புற வேலை உறுதிச்சட்டத் தைக் கொண்டு வர வேண்டும். அதில் மூன்றில் ஒரு பங்கு வேலைகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தல்.- சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான நிதி ஆதரவை விரிவாக்குதல்.- காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளோடு வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட வேண்டும்.