வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நிதியுதவி

நாகபுரி, ஜூலை 15: கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும்; அந்த நிதியை வேட்பாளர்களின் பிரசாரச் செலுவுகளுக்கு தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
தேர்தலின்போது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்குகின்றன. இதைத் தடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வேலை.
இதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் ஆணையம் பணத்தைப் பெற்று அதனை வேட்பாளர்களின் பிரசாரச் செலவுகளுக்கு (வாகனங்களுக்கு எரிபொருள், ஓட்டுநர், போஸ்டர்) வழங்கினால் பணநாயகமும் தடுக்கப்படும்; கட்சியின் தலைமைக்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார்.
அரசு சாராத்தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ""பணத்தின் ஆளுமையால் ஜனநாயகம் களவாடப்பட்டு விட்டதா?'' எனும் கருத்தரங்கில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
கறுப்புப் பணத்தின் நடமாட்டத்தையும் அச்சுறுத்தலையும் தடுக்க வேண்டுமெனில் தேர்தலில் கண்டிப்பாக சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலுக்குப் பின் விசுவாசத்துக்கு குறை ஏற்படாமல் அரசியல் கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.
ஒருமுறை, தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு செக் (காசோலை) மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்தபோது கட்சியின் முன்னாள் செயலர் சுர்ஜீத் சிங் நேர்மையாக அந்நிறுவனத்திடமே அந்த செக்கைத் திருப்பிக் கொடுத்து புது இலக்கணத்தை உருவாக்
கினார்.
ஹசாரே குறித்து: ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வரும் அண்ணா ஹசாரே குறித்துப் பேசிய அவர், ஹசாரே குழுவினர் அரசியல் கட்சியினர் பணத்தை சேகரிப்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அது எங்கிருந்து (கார்ப்பரேட் நிறுவனங்கள்) வருகிறது என்பது குறித்து குரல் கொடுப்பதில்லை. முதலில் நாம் பணம் வரும் வழியைத்தான் அடைக்க வேண்டும்.
யாருக்கும் 50 சதவீதம் இல்லை: கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த கட்சிகளைப் பார்த்தோமேயானால் எந்தக் கட்சிக்குமே 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி அரசு 42 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. அதுவும் கூட 50 சதவீதத்தைத் தொடவில்லை.
ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி செய்து வருகிறது.
சிறந்த ஜனநாயகம் என்பது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்களாவது நாடாளுமன்றமும் மற்றும் சட்டப் பேரவையும் செயல்பட வேண்டும்.
60 ஆண்டுக்கு முன்னாள் நாம் புதிய குடியரசை அமைத்து, இனிமேல் புதிய வளமான வாழ்க்கையை அமைக்கலாம் என்று தெரிவித்து ஆரம்பித்தோம். ஆனால் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட அந்த வளமான வாழ்வு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார் யெச்சூரி.